தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் ஐடியேஷன் கேம்ப் !
ஐடியேஷன் கேம்ப்
நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்கள்,தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு உருவளிக்கும் முகாம் (Ideation Camp) நடைபெற்றது.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு உருவளிக்கும் முகாம் (Ideation Camp) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு கே. எஸ். ஆர். தொழில்நுட்பக்கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆம் தேதி நடைபெற்றது. முகாமினை கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர், கோபாலகிருஷ்ணன் , அவர்கள் துவக்கிவைத்துப் பேசினார். மேலும் இடிஐஐ – யின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. வாசுதேவன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் . தொடர்ந்து, கல்லூரியின் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் திருவேங்கடம் அவர்கள் சிறப்புரையாற்றினார். முதன்மைப்பயிற்றுனர் திரு.மார்ட்டின் அவர்கள், உருவளிக்கும் முகாம் குறித்து விளக்கவுரையாற்றினார்.
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொழில்முனைத்தலுக்கான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் பயிற்சிகளை பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைதல் சிந்தனையை உருவாக்கும் வகையில் நடத்திவருகிறது. குறிப்பாக ஆண்டுதோறும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையே புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டிகள் நடத்தி சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கிவருகிறது.
இந்த ஆண்டு இப்போட்டிக்கான விண்ணப்பங்கள் 9355 மாணவர் அணிகளிடமிருந்து வரப்பெற்று, முதல்கட்ட ஆய்விற்குப்பின்னர் 474 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அணிகளுக்கு ஒருநாள் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு உருவளிக்கும் முகாம் (Ideation Camp) தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
இம்முகாமில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து, 44 அணிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களோடு மாணவ வழிகாட்டிகள், நடுவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழா ஏற்பாடுகளை தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. வாசுதேவன் மற்றும் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சிமியோன்ராஜ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.