மோடி ஜெயித்தால் இனி இந்தியாவில் தேர்தலே நடைபெறாது: அமைச்சர்

மோடி ஜெயித்தால் இனி இந்தியாவில் தேர்தலே நடைபெறாது: அமைச்சர்
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர்
மீண்டும் பிரதமர் மோடி ஜெயித்து ஆட்சிக்கு வந்தால் இனி இந்தியாவில் தேர்தலே நடைபெறாது என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  தெரிவித்துள்ளார்.

தஞ்சை தொகுதி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ச.முரசொலிக்கு வாக்குக் கேட்டு, சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு) கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை) நா.அசோக்குமார் (பேராவூரணி), ரெட்டவயல், ஒட்டங்காடு, புனல்வாசல்,

பாதிரங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். வாக்குச் சேகரிக்க வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர், "மீண்டும் பிரதமர் மோடி ஜெயித்து ஆட்சிக்கு வந்தால் இனி இந்தியாவில் தேர்தலே நடைபெறாது. ஜனநாயக நாட்டில் நாம் ஒற்றுமையோடு ஓட்டு போடும் சூழல் இல்லாமல் போய்விடும். இதனால் சட்டமன்ற உறுப்பினர்,

ஊராட்சி மன்ற தலைவர்கள் என எந்தப் பதவியும் இல்லாமல் சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறும். சாதி, மதத்தின் பெயரால் இந்த நாட்டை துண்டாடி, அழிவுப்பாதைக்கு நாட்டைக் கொண்டு செல்லும் பாஜகவை வீழ்த்துகின்ற அறப்போரில் நாம் தான் முன்னணியில் இருக்கின்றோம். பாஜகவுக்கும், பாஜகவுக்கு துணை போகின்ற அதிமுகவுக்கும் இங்கு இடம் இல்லை

என்கிற அளவுக்கு வாக்காளர்கள் சிந்தித்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வேட்பாளர் முரசொலியை வெற்றி பெற செய்யுங்கள்" என்று வாக்கு கேட்டார். இந்த பிரச்சார பயணத்தில் எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரை, பேராவூரணி நா.அசோக்குமார் மற்றும் ஒன்றியக் கழக செயலாளர்கள்,

நகரக்கழக செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுக, கூட்டணிக் கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story