ஆறுகளில் குப்பை, ஆக்கிரமிப்பு செய்தால் நடவடிக்கை - அமைச்சர் துரைமுருகன்

ஆறுகளில் குப்பை, ஆக்கிரமிப்பு செய்தால் நடவடிக்கை - அமைச்சர் துரைமுருகன்

பேருந்து இயக்கம் துவக்கம் 

ஆறுகளில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீதும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் பொன்னை பேருந்து நிலையத்திலிருந்து சென்னை வரை புதிய, பேருந்தை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, பொன்னையில் இருந்து சென்னை வரை புதிய பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொன்னை பாலாற்றின் குறுக்கே பாலம் காட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி விரைவில் முடிவு பெற்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட உள்ளது.

குறிப்பாக பொன்னையாற்றில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக புகார்கள் வருகிறது. ஆறுகளில் குப்பைகளை கொட்டினாலும் , அல்லது ஆக்கிரமிப்பு செய்தாலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளதால், ஆறுகளில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீதும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இன்று தமிழக கோவில்களில் பூஜை செய்யக்கூடாது என தமிழக அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டை வைத்திருப்பது தவறானது. தமிழக முழுவதும் காலாவதியான கல்குவாரிகள் செயல்பட்டு வந்தால் சம்பந்தப்பட்ட குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காலாவதியான குவாரிகள் கணக்கெடுக்கும் பணியும் துவக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Tags

Next Story