போற போக்கை பார்த்தால் நாட்டையே வித்துருவாங்க போல: சாலமன் பாப்பையா வேதனை
கையெழுத்திடும் சாலமன் பாப்பையா
மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து கையெழுத்திட்ட சாலமன் பாப்பையா, 'போற போக்கை பார்த்தால் நாட்டையே விற்றுவிடுவர் போலிருக்கிறது' என வேதனை தெரிவித்தார். மதுரையில் ரயில்வே மைதானம் மற்றும் ரயில்வே காலனி இடத்தை தனியாருக்கு தாரை வார்க்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இம்முயற்சியை ரயில்வே நிர்வாகம் கைவிட வலியுறுத்தி நவ. 6ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ள தமிழறிஞர் சாலமன் பாப்பையா, நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ''இந்த மைதானத்தில் எங்கள் பிள்ளைகள் விளையாடுவர்.
அந்த இடத்திற்கு நான் செல்ல முடியாவிட்டாலும் கூட, முதியோர் பலர் அங்கு சென்று காலைப் பொழுதில் நடைபயில்கிற காட்சியை நான் பார்க்கிறேன். இது மக்களின் சொத்தாக உள்ளது. இந்த சொத்தைக் கொண்டு போய் தனியாருக்கு விற்க கொடுப்பது எனச் சொன்னால், போற போக்கைப் பார்த்தால் நாட்டையே விற்று விடுவர் போல இருக்கிறது.
மிகப்பெரிய மாற்று வேலையெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. என்றைக்கும் போலவே, அங்கு மக்கள் போகவும், நடக்கவும், ஓடவும், விளையாடவுமான இடமாக, திடலாக எப்போதும் இது இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.