பொதுப்பணித்துறை ஏரியில் சட்டவிரோதமாக மீன் பிடித்து விற்பனை
தெடாவூர் ஏரி
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 264 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. தொடர் மழை காரணமாக ஏரியில் தண்ணீர் உள்ள நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஏரியில் அனுமதி பெறாமல் மீன் குஞ்சுகள் விட்டு, மீன் பிடித்து விற்பனை செய்து வருவதாக பொதுப்பணித்துறை நிர்வாக செயற்பொறியாளர் ஆனந்தனுக்கு புகார் சென்றது.
அவரது உத்தரவின் பேரில், ஆத்தூர் உட்கோட்ட பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் கவிதா ராணி தலைமையில், நீர்வளத்துறை பாசன உதவியாளர் செல்வம்உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று தெடாவூர் ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏரியில் சிலர் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அதிகாரிகளை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அரசு அனுமதி பெறாமல் தெடாவூர் பகுதியைச் சேர்ந்த சிலர் உள்ளூரில் மறைமுக ஏலம் விட்டு மீன் பிடிக்க அனுமதித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, சட்டவி ரோதமாக ஏரியில் மீன் பிடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீர்வளத்துறை பாசன உதவியாளர் செல்வம் கெங்கவல்லி போலீசில் புகாரளித்தார்.இது குறித்து உதவி பொறியாளர் ரத்தின வேல் கூறுகையில், ஏரியில் மீன் பிடிக்க மேட்டூர் மீனவர் சங்கம் மூலம் மீனவர் சமுதாய மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவர்கள் மீன்பிடிக்க முன்வராத பட்சத்தில், பொதுப்பணித்துறை மூலம் அரசிடம் அனுமதிபெற்று பொது ஏலம் விடப்படுவது வழக்கம். இந்நிலையில் பொதுப்பணித்துறை அனுமதியும் இல்லாமல் மீன் குஞ்சுகளை விட்டு மீன் பிடித்தவர்கள் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது, என்றார். புகார் மீது கெங்கவல்லி எஸ்ஐ நிர்மலாவிசாரணை நடத்தி வருகிறார்.