உணவகத்திற்கு முறைகேடான பாதாள சாக்கடை இணைப்பு
முறைகேடான பாதாள சாக்கடை இணைப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 24வது வார்டுக்குட்பட்ட, டி.கே.நம்பி தெருவில் தனியார் உணவகம் ஒன்று அமைக்கப்பட்டு, அதற்கான உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில், உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடை இணைப்பு பிரதான சாலையான டி.கே.நம்பி தெருவில், நெடுஞ்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இணைப்பு தர வேண்டும்.
ஆனால், முறைகேடாக வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதியான சுக்லா பாளையம் கோவிந்தன் தெருவில், தார்ச் சாலையை உடைத்து இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், நெடுஞ்சாலைத் துறைக்கும், மாநகராட்சிக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டு கவுன்சிலர் புனிதா சம்பத் கூறியதாவது: ஏற்கனவே 23வது வார்டில் உள்ள தெருக்களில்பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. உணவக கழிவுநீர் இணைப்பு நெடுஞ்சாலையில் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், தார்ச் சாலையை உடைத்து முறைகேடாக குடியிருப்புகள் உள்ள தெருவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு ஏற்படாமல், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவது மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.