சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான வெடிபொருட்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான வெடிபொருட்கள் பறிமுதல்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள்

கும்பகோணம் அருகே வீட்டின் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பட்டாசு மற்றும் வெடி மருந்து பொருட்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாகரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் முத்திரைத்தாள் விற்பனையாளராக உள்ளார். இவருக்கு சொந்தமான வீட்டில் உள்ள குடோனில் அரசு அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நாச்சியார்கோவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், நாச்சியார்கோவில் காவல் ஆய்வாளர் ரேகாராணி மற்றும் காவல் துறையினர் ரமேஷ் குமாரின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பூட்டப்பட்டிருந்த ஒரு குடோனை திறக்கும்படி ரமேஷின் உறவினர்களிடம் அதிகாரிகள் தெரிவித்த போது, அங்கு உரமூட்டைகள் இருப்பதாக கூறி உறவினர்கள் திறக்க மறுத்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் குடோனை திறந்து பார்த்தபோது அங்கு மூட்டை மூட்டையாக பட்டாசுகள், நாட்டு வெடிகள், வெடி தயாரிப்பு மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் வெளி நபர்கள் யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக வெடிமூட்டைகளைச் சுற்றிலும் உரங்களை தூவி உரமூட்டைகள் இருப்பது போல் செய்திருந்தனர். இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 557 கிலோ பட்டாசு, நாட்டு வெடிகள் மற்றும் நாட்டு வெடி தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அடங்கிய 204 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 20 லட்சம் என கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறையினர் கெடுபிடி காரணமாக, அருகில் உள்ள தஞ்சை மாவட்ட எல்லையில் குடோன்களை வாடகைக்கு எடுத்து பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து வலங்கைமானை சேர்ந்த சரவணன் (வயது 45) தன்னுடைய நண்பரான நாகராசம்பேட்டை ரமேஷ் குமாரின் வீட்டில் உள்ள குடோனை வாடகைக்கு எடுத்து தீபாவளி விற்பனைக்காக தான் சட்டவிரோதமாக தயாரித்த பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சரவணன்,ரமேஷ் குமார் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags

Next Story