காஞ்சியில் எழுத, படிக்க தெரியாதோர் 7,081 பேர்!
பைல் படம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் எழுத, படிக்க தெரியாதவர்கள், 7,081 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டது. அவர்களுக்கு, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின்கீழ், 426 கற்போர் மையங்கள் அமைக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆண்களை காட்டிலும், பெண்களே அதிகம் படிக்காதவர்களாக உள்ளனர் என, கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இவர்களுக்கு கல்வி கற்று கொடுக்க, 426 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். விழிப்புணர்வு காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை வாயிலாக, மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கணக்கெடுப்பு, 2022ல் நடந்தது. இந்த கணக்கெடுப்பு பணியில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள், வட்டார மைய மேற்பார்வையாளர்கள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
இதில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், ரேஷன் கடை, பள்ளிகளில் மாணவர்கள் ஆகியோரின் தகவல் அடிப்படையில், 2022- - 23 மற்றும் 2023- - 24 ஆகிய இரு நிதி ஆண்டுகளிலும், 14,708 பேர் எழுதவும், படிக்கவும்தெரியாதவர்களாக உள்ளனர்.