லால்குடி ஜமாபந்தியில் 96 மனுக்களுக்கு உடனடி தீர்வு

லால்குடி ஜமாபந்தியில் 96 மனுக்களுக்கு உடனடி தீர்வு

ஆணைகள் வழங்கல் 

லால்குடி தாலுகாவில் வருவாய்த்துறை சார்பில் நடைப்பெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 96 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் வருவாய்த்துறை சார்பில் வரும் 2023 - 24 ம் ஆண்டுக்கான (1433 ஆம் பசலி) ஜமாபந்தி நிறைவு விழா குடிகள் மாநாடு நேற்று நடைப்பெற்றது. தாசில்தார் முருகன், நகராட்சி கமிஷனர் குமார், தலைமை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் லோபோ, லால்குடி மண்டல துணை தாசில்தார் ரவிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜமாபந்தியில் புள்ளம்பாடி, பெருவளப்பூர், கல்லக்குடி, வாளாடி, கீழன்பில், லால்குடி என பிர்காவில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று பட்டா மாற்றம், தனி பட்டா , வீட்டு மனை பட்டா, வாரிசு சான்று, விதவை சான்று, ரேசன் கார்டு, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக ஆயிரத்து 236 மனுக்களை கொடுத்தனர். இதில் 96 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, ஆயிரத்து 140 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

லால்குடி ஆர்டிஓ சிவசுப்ரமணியன் தலைமை வகித்து பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில், இந்த முறை ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. நான் ஏறக்குறைய 7 மாவட்டங்களில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்து உள்ளேன். மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது, நமது மாவட்டம் சிறந்த மாவட்டமாகும். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது. வருவாய்த்துறை மற்றும் விவசாயிகளுக்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பது ஆரோக்கியமான ஒன்றாகும். லால்குடி பகுதி மக்கள் மரியாதையுடன் அரசு அதிகாரிகளை அணுகி வருகின்றனர் என்றார்.

நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் அங்கமுத்து, கடைமடை பாசன விவசாயிகள் சங்க தலைவர் செங்கை செல்வராஜ், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். புள்ளம்பாடி மண்டல துணை தாசில்தார் முருகேசன் வரவேற்றார். வாளாடி விஏஓ ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags

Next Story