குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் - கலெக்டர் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சீரான குடிநீர் வினியோகம், குடிநீர் பிரச்சினைகள் மற்றும் மின்சார பிரச்சினைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:குடிநீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் பிரச்சினைகள் ஏற்படுத்தும் போது மட்டும் அதில் உள்ள பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது. மின்சாரத்தை திருடி பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை மின்சார துறைக்கு தெரிவிக்க வேண்டும். கோடைகாலத்தில் மின்சார தட்டுப்பாட்டிற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. அதனால் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

சீரான மின்சாரத்தை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை மூலமாக 2021-2024 வரையிலான வளர்ச்சித் திட்டப்பணிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகள் நிலுவையில் உள்ளது. அதனை உடனடியாக முடிக்க வேண்டும். அதில் குடிநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கோடை காலத்தில் ஆங்காங்கே திருவிழாக்கள், பண்டிகைகள் தொடங்கும். அந்தப்பகுதிகளில் சீரான குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் பேசினார்.

Tags

Read MoreRead Less
Next Story