தீவனப்புல் மற்றும் பசுந்தீவனத்தின் முக்கியத்துவம்

தீவனப்புல் மற்றும் பசுந்தீவனத்தின் முக்கியத்துவம்
தீவனப்புல்
கால்நடைகளுக்கான தீவனப்புல் வளர்ப்பு மேலாண்மை மற்றும் பசுந்தீவனங்களின் முக்கியத்துவம் குறித்த பயிற்சி, குறிச்சி கிராமத்தில் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு எஸ். ராணி அறிவுறுத்தலின்படி, அட்மா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான தீவனப்புல் வளர்ப்பு மேலாண்மை மற்றும் பசுந்தீவனங்களின் முக்கியத்துவம் குறித்த பயிற்சி, குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது.

துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன்.செல்வி வரவேற்றார். தீவனங்களின் முக்கியத்துவம் குறித்து, பேராவூரணி வட்டார கால்நடை உதவி மருத்துவர் பா.கண்ணன் பங்கேற்றுப் பேசுகையில், "கால்நடைகளுக்கு தேவையான, சத்து மிகுந்த பசுந்தீவனங்கள் அளிப்பதால் பால் உற்பத்தியை மென்மேலும் பெருக்கலாம். தீவனங்கள் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று செரிக்கக் கூடிய நார் மற்றும் மாவுச்சத்து அதிகம் உள்ளவை, மற்றது புரதச்சத்து அதிகம் கொண்டவை. பசுந்தீவனங்களில் உள்ள நார்ச்சத்து அதிக செரிமானம் உடையது. நார்ச்சத்து அசையூன் இரைப்பையில் அசிட்டிக் அமிலமாக மாற்றப்படுகிறது. இந்த அமிலம் தான் பாலில் கொழுப்பு சத்தினை அதிகமாக்குவதில் முக்கிய செயலாற்றுகிறது. இதனால் பாலில் கொழுப்பு விகிதம் கூடுதலாகி விவசாயிகளுக்கு அதிக லாபத்தினை தருகிறது. பசும்புல்லில் உள்ள புரதச்சத்து கால்நடைகள் நன்கு வளரவும், சினை பிடிக்கவும், கன்று வளர்ச்சிக்கும் முக்கிய செயலாற்றுகிறது. புரதச்சத்து குறைந்தால், முறையற்ற சினைப்படுவதும், கருப்பை கருவை தாங்கும் தன்மை போன்ற குறைகள் ஏற்படுகின்றன.

கடைசி மூன்று மாத சினையின் போது கறவை மாடுகளுக்கு கூடுதலான புரதச்சத்து தேவை. மேற்கண்ட குறைகளை நாம் புரதச்சத்து அதிகம் உள்ள வேலி மசால், தீவன தட்டைப்பயறு போன்ற தீவனங்களை அளிப்பதன் மூலம் தவிர்க்கலாம். பசுந்தீவனங்களை அளிப்பதன் மூலம் பசுக்களுக்கு தேவையான வைட்டமின் 'ஏ' சத்து அதிக அளவில் கிடைக்கிறது. இந்த சத்தானது கால்நடைகளின் உடல் வளர்ச்சிக்கும், இனப்பெருக்க செயல்களுக்கும் முக்கியமானது. கால்நடைகளுக்கு தானிய தீவனப் பயிர்களையும், பயறு வகை தீவனப் பயிர்களையும் சரிவிகிதத்தில் அளித்தோமானால், கண்டிப்பாக மொத்த தீவனச் செலவு குறைவதோடு, நிகர லாபமும் அதிகரிக்கும்" என்றார்.

இப்பயிற்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வைரக்கண்ணு, கிராமத்தினர், விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் வர்ஷா, அட்மா திட்ட அலுவலர்கள் கு.நெடுஞ்செழியன், த.சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story