மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் - முன்னாள் தலைமை நீதிபதி

மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் -  முன்னாள் தலைமை நீதிபதி
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சாதசிவம்,
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டம், அரூரில் கொங்கு வேளாள கவுண்டர்கள் திருமண மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தீரன் சின்னமலை சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில பொதுச் செயலரும், திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியின் உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை வகித்தார். தருமபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்க செயலர் எம்.கே.சேகர் வரவேற்றார். தீரன் சின்னமலை முழு திருவுருவ வெண்கல சிலையை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் திறந்து வைத்தார். '

தொடர்ந்து அவர் விழாவில் பேசியதாவது: உச்சநீதிமன்றத்தில் நான் நீதிபதியாக இருந்தபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள், சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதிகளை நேரடியாக வழங்க கூடாது என்ற வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது, இது தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. இந்த அமர்வில் நான் 4ஆவது நீதிபதியாக இருந்தேன். அப்போது, 4 நீதிபதிகளும் மக்களால் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு நேரடியாக நிதியினை வழங்க கூடாது என பரிந்துரை செய்தனர்.

ஆனால், நான் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளிடம் நிதிகளை வழங்கினால் தான், கிராமப் பகுதியில் சாலை வசதிகளை ஏற்படுத்துதல், கல்வி நிலையங்களை மேம்படுத்துதல், சுகாதார வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த அவர்களால் முடியும். எனவே, மக்களால் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகளிடம் மட்டுமே நிதிகளை வழங்க வேண்டும் என்ற பரிந்துரை வழங்கினேன். என்னுடைய பரிந்துரையை அந்த அமர்வில் இருந்த மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேரும் ஏற்றுக்கொண்டனர். நான் கிராமப் பகுதியில் பிறந்து வளர்ந்ததால் நாள்தோறும் ஏழை, எளிய மக்கள் அடையும் சிரமங்களை தெரிந்து இந்த பரிந்துரையை செய்தேன்.

அதேபோல், பொதுத் தேர்தல்களில் நோட்டா அறிமுகம் செய்யுவும் காரணமாக இருந்தேன். ஒரு தொகுதியில் 4 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றால், ஒரு வாக்களாருக்கு யாரையும் பிடிக்கவில்லை எனில், அந்த வாக்காளர் நோட்டாவில் தனது வாக்கினை பதிவு செய்யலாம். நோட்டாவில் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் பதிவானால், அடுத்து வரும் தேர்தலில், அரசியல் கட்சியினர் நல்ல வேட்பாளர்களை நிறுத்த முன்வருவார்கள். எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிகளுக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு சேவை செய்யும், மக்களுக்கு பதில் சொல்லவும் கடமை பட்டவர்களாக உள்ளனர்.

கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்டவர் தீரன் சின்னமலை. தீரன் சின்னமலை வரலாற்று குறிப்புகள் வெளிநாட்டினர் பலர் தங்களின் பயண குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர். கொங்கு நாட்டின் குறுநில மன்னராக இருந்த தீரன் சின்னமலை ஆட்சியில் அமைதியான வாழ்வும், தொழில், மருத்துவம், வேளாண் பணிகளில் சிறந்து விளங்கியுள்ளது. இன்றளவும் கொங்கு மண்டலத்தில் தொழில் வளம் சிறந்து விளங்குகிறது. வட மாநில மக்கள் கூட கொங்கு மண்டலத்தை நோக்கியே வருகை தருகின்றனர்.கொங்கு மண்ணில் ஆதிக்க மனப்பான்மை எப்போதும் இல்லை. உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதமும் எப்போதும் இல்லை. வேளாண் குடும்பத்தில் பிறந்த நான் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து உயர்ந்துள்ளேன். எனவே, கிராமப் பகுதியிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நன்றாக படித்து, வேலை வாய்ப்புகளை பெற்று சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்றார்.

சிலை திறப்பு விழா மலரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.சின்ராஜ் வெளியிட முதல் பிரதியை கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் மாநிலத் தலைவர் ஆர்.தேவராசன் பெற்றுக்கொண்டார். விழா தொகுப்பினை தருமபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கத் தலைவர் வே.சந்திரசேகரன், பொருளர் எஸ்.எம்.தங்கராசு ஆகியோர் மேற்கொண்டனர். இந்த விழாவில் கர்நாடக மாநில உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை ஆணையர் ஆர். இராமச்சந்திரன், தமிழ்நாடு சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான செ.முத்துசாமி, ஈரோடு வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், பெருந்துறை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எல்.சென்னியப்பன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலர் ஜி.அசோகன், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, காலை 9.30 மணியளவில் முளைப்பாலிகை ஊர்வலத்தை கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் உ.தனியரசு தொடக்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் வழக்கறிஞர் ஜி.வி.பிரகாசம் சர்ச்சில், நாகராசன், திருப்பதி கவுண்டர், பொன்.வெங்கடாசலம்சின்னசாமி, தமிழரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலத்தில் நையாண்டி மேள நிகழ்ச்சியும், கேரளா செண்டை மேள நிகழ்சியும் நடைபெற்றது. சிலை திறப்பு விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட கலந்துகொண்டனர்.

Tags

Next Story