மேம்படுத்தப்பட்ட கோவில் வளாக நடைபாதை
செங்கல்பட்டு மாவட்டம் முன்குடுமீஸ்வரர் கோவில் வளாக நடைபாதை மேம்படுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்துார் பகுதியில், முன்குடுமீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. சிவபெருமான், தனக்கு பூஜை சேவையாற்றும் அர்ச்சகருக்காக, லிங்க பாணத்தில் குடுமியுடன் காட்சியளித்து, 'முன்குடுமீஸ்வரர்' என பெயர் பெற்றார். இங்கு அந்தணர் நிலத்தில் விளைந்த நெல், பொன்னாக மாறியதால், இவ்வூர் 'பொன்விளைந்தகளத்துார்' என்று அழைக்கப்படுகிறது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவிலை, மத்திய தொல்லியல் துறையின் மாமல்லபுரம் துணை வட்ட பிரிவு, அதன் கட்டுப்பாட்டில் பாதுகாத்து பராமரிக்கிறது.
கோவில் வளாக நடைபாதை, நீண்டகாலமாக மண் பாதையாக இருந்தது. பாதையில் புதர் உருவாகியும், மழையின் போது சேற்றுச்சகதியாக மாறியும், பக்தர்கள் நடக்க சிரமப்பட்டனர். தொல்லியல் துறை, சில ஆண்டுகளுக்கு முன், கோவில் சுவரை ஒட்டி, பக்தர்கள் வலம்வர, கற்களில் பாதை அமைத்தது. வளாகத்தில் பக்தர்கள் நடக்க கருதி, கிழக்கு மேற்கில் மற்றும் வடக்கு தெற்கில் என, இரண்டு நடைபாதைகளையும், கற்கள் பாதையாக தற்போது தொல்லியல் துறையினர் மேம்படுத்தியுள்ளனர்.