விரக்தியில் துணை வட்டாட்சியருக்கு 'பொக்கே' அளித்த பொதுமக்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பேரூராட்சி 3வது வார்டு பகுதியில் அருந்ததியர் குடும்பங்கள் பலரும் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இவர்கள் தங்களுக்கு வெண்ணந்தூர் ஒன்றியம் மின்னக்கல் பகுதியில் இலவச வீட்டுமனைக் கேட்டு ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
ஆனால், இது நாள் வரையில் இலவச வீட்டு மனை வழங்க வருவாய்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, வெண்ணந்தூர் பேரூராட்சி 3வது வார்டு பகுதியில் வாடகை வீட்டில் குடியிருக்கும் அருந்ததியர் மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது வீடுகளில் கருப்புக் கொடி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, வட்டாட்சியரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 'பொக்கே' (மலர் கொத்து) வுடன் வந்தனர்.
ஆனால், ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் துணை வட்டாட்சியரிடம் மனுவுக்கு பதிலாக 'பொக்கே' கொடுத்தனர். இதுகுறித்து, தமிழ்சிறுத்தைகள் கட்சி நிறுவனர் அகத்தியன் கூறுகையில், கடந்த மாதம் 26ம் தேதி வீட்டு மனை பட்டா வழங்காத வருவாய் துறையைக் கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர் பை தெரிவித்து வருகின்றனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், வட்டாட்சியரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ராசிபுரம் வட்டாட்சியருக்கு பொக்கே கொடுக்க வந்தோம். அவர் இல்லாததால் துணை வட்டாட்சியரிடம் கொடுத்துள்ளோம் என்றார்.