குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் அன்னாசி பழத்தின் விலை சரிவு
குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் அன்னாசி பழத்தின் விலை சரிந்துள்ளது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் ரப்பர் தோட்டங்களில் ஊடு பயிராக அன்னாசி பயிரிடப்படுகிறது. இங்குள்ள அன்னாசி பழங்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக கோடைகாரங்களில் அன்னாசி பழங்களுக்கு அதிக விலை கிடைக்கும். இந்தியாவில் அன்னாசி பழங்களின் விலையை கேரள மாநிலத்தில் உள்ள வாழைகுளம் சந்தை தீர்மானிக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் குமரி மாவட்டத்தில் படுக்கும் தருவாயில் உள்ள தரமான அன்னாசிப்பழ காய்கள் கிலோவுக்கு ரூபாய் 60 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டன. அதே வேளையில் பழங்கள் கிலோவுக்கு ரூ. 69 வரை கொள்முதல் செய்யப்பட்டன. பழங்களுக்கு அதிக விலை கிடைத்து வந்ததால் பச்சை காய்களை விவசாயிகள் அறுவடை செய்யாமல் விட்டிருந்தனர். இந்த நிலையில் மே மாதம் இயல்புக்கு மாறாக தொடர் கன மழை பெய்த நிலையில் பழங்களின் விலை சரிந்தது. கிலோ 30க்கு கீழாக குறைந்தது. இதை தொடர்ந்து இந்த மாத தொடக்கத்திலும் தொடர்மழை பெய்ததால் பழங்கள் விலை மேலும் சரிவடைந்தது.
தற்போது மழை குறைந்து வெயில் அடிப்பதால் விலை சற்று முன்னேற்றங்கள் கண்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி குலசேகரத்தில் சிறப்பு கிரேடு பச்சை காய்கள் கிலோ ரூ. 48 க்கும், சாதாரண கிரேடு கிலோவுக்கு ரூ. 46க்கும் கொள்முதல் செய்யப்பட்டன. அதே வேளையில் பழங்கள் கிலோவுக்கு 36 ரூபாய் தான் கொள்முதல் செய்யப்பட்டன. மேலும் சிறிய அளவிலான பச்சை காய்களும் பழங்களும் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன.