கும்பகோணத்தில், தனியார் விடுதிகளில் தங்குவதற்கு கட்டுப்பாடு விதிப்பு
கோப்பு படம்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கும்பகோணத்தில், தனியார் தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதியில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் பொது நடத்தை எப்படி இருக்கவேண்டும். தேர்தல் கூட்டங்கள் நடத்துவது ஊர்வலம் செல்வது தொடர்பான விதிமுறைகள் என்ன வாக்குப்பதிவு நாளில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். வாக்குசாவடியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறை குறித்து தெரிவித்திருந்தனர்.
அதே போல் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பரிசு பொருட்கள் கொண்டு சென்றால் தகுந்த ஆவணங்கள் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும். அதே போல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கையில் ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்ல கூடாது என பல விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கு என்று தனியான தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு குழு என குழுக்கள் அமைத்து தீவிரமாக தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது. அதே போல் நாடாளுமன்ற தேர்தலில் பணம் பட்டுவாடா பணம் மற்றும் பதுக்கலை தடுக்கும் விதிமாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் கும்பகோணத்தில் தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை செய்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் கார் உள்ளிட்ட வாகனங்களை ஊர் எல்லையில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
ஆய்வின் போது ஆவணகள் இன்றி கொண்டுவரப்படும் பொருட்கள், பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசு சார்பில் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதே போல் போலீசார் பஸ் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் புறநகர்பகுதியில் உள்ள விடுதிகளில் திடீரனெ சென்று தங்க இருப்பவர்களின் விவரங்கள் சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூறுகையில், கும்பகோணத்தில் சுற்றுலா தளங்களை விட சோழர்காலத்து கோவில்கள் மற்றும் சிற்பங்கள் தான் அதிகம் உள்ளன.
குறிப்பாக நவகிரங்க கோவில்கள் உள்ளதால் ஏராளமானோர் வந்து கோவில்களுக்கு தரிசனம் செய்வார்கள். அவர்களில் உள்ளூர் மக்களைவிட வெளியூர் மக்கள் தான் அதிகளவில் வருவார்கள். அவ்வாறு வருபவர்கள் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கிவிட்டு சாமி தரிசனம் முடித்து மீண்டும் ஊர்க்கு செல்வாா்கள்.
வழக்கமாக கோடை காலம் என்பதால் இந்த நேரங்களில் கோடை விடுமுறை விடப்பட்டு வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வந்து செல்வார்கள். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உள்ளூர் எந்த கட்சியை சேர்ந்த வேட்பாளராக இருந்தாலும் அவர்களுக்கு அந்த கட்சியை சேர்ந்த மற்ற பகுதியை சேர்ந்தவர்களால் பணம் மற்றும் அதன்சார்ந்து எந்த உதவியும் வந்து விட கூடாது என்பதற்காக ஊர்மற்றும் மாவட்ட எல்லையில் சோதனை செய்து வருகின்றனர். அதன்படி வெளியூரில் இருந்து கோவில் மற்றும் அலுவலகம் சார்பாக யாரேனும் வந்து தங்கி இருந்தால் அவர்களின் உரிய ஆவணம் காண்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதே போல் தஞ்சை, நாகை, திருவாரூர்,
மயிலாடுதுறை, அரியலூர் அண்டை மாவட்டம் மற்றும் உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கும் விடுதியில் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டாம் என்றும், அவ்வாறு தவிர்க்கும் பட்சம் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்சி கொடிகள் பொருத்தப்பட்ட காரில் வந்தாலும், கட்சி சம்பந்தப்பட்ட ஆடைகள் அணிந்து வந்தாலும் அவர்களுக்கு அறை ஒதுக்க வேண்டாம் என்றுள்ளனர். வெ
ளியூர்களில் இருந்து கோவில் மற்றும் திருமணம் ஆகிய வற்றிருக்கு வந்திருந்தால் ஆவணங்கள் காண்பிக்க வேண்டும். பொதுவாக கோடை காலத்தில் தான் சுற்றுலா பயணிகள் வருகையில் தங்கும் விடுதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் தேர்தல் நடத்தை விதிமுறையால் யாரும் அதிகளவில் பணம் வைத்திருப்பதில்லை. அவ்வாறு வருபவர்கள் குறிபிட்ட நேரத்திற்கு திட்டமிட்டு அறையில் தங்காமல் உடனே சென்றுவிடுகின்றனர். இதனால் சாதரண தங்கும் விடுதிக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.40 முதல் ரூ.60 ஆயிரம் வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு ஏற்பட்டால் மாநகராட்சிக்கு கொடுக்க கூடிய வரி, மின்சாரகட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த சிரமம் உண்டாகும் என்றனர்.