மயிலாடுதுறையில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் ஐக்கியம்
அதிமுகவில் இணைந்த திமுகவினர்
மயிலாடுதுறையில் திமுகவை சேர்ந்த இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோவிலில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது.
இதில் உளுத்துக்குப்பை ஊராட்சியின் 3 வது வார்டு உறுப்பினர் ரியாஸ் என்பவர் தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் செம்பனார்கோவில் அதிமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர். அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.பவுன்ராஜ், திமுகவில் இருந்து அதிமுகவிற்கு வந்த இளைஞர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டார்.
புதிய தொண்டர்கள் கட்சியில் இணையும் விழாவின்போது புதிதாக கட்சிக்கு வந்த இளைஞர்கள் பட்டாசு வெடித்து அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜிக்கு பிரமாண்ட மாலை அணிவித்து கட்சியில் இணைந்தனர். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தது திமுகவினரிடையே , பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.