முடிச்சூரில் 400 குடும்பத்தினரின் பெயர் நிவாரண பட்டியலில் இல்லை

முடிச்சூரில் 400 குடும்பத்தினரின் பெயர் நிவாரண பட்டியலில் இல்லை

வெள்ளநிவாரணம் வழங்கவில்லை

உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி பலத்த வெள்ளசேதம் ஏற்பட்டது. இதில் முடிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட மதனபுரம், அமுதம் நகர், இந்திராநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் 12 அடிக்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவி தொகையாக ரூ.6 ஆயிரம் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பயனாளிகளின் பெயர்பட்டியல் அந்தந்த ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இதில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட முடிச்சூர் மதனபுரம், அமுதம் நகரில் உள்ள ரேசன்கடைகளில் சுமார் 400 பேரின் பெயர்கள் வெள்ள நிவாரண உதவி தொகை வழங்குவதற்கான பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்புக்குள்ளான மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதன் காரணமாக முடிச்சூர் மதனபுரம் பகுதியில் நிவாரண தொகை வழங்கும் ரேசன் கடையில் கூட்டமின்றி காணப்படுகிறது. அதே சமயம் நிவாரன தொகை வழங்கும் பட்டியலில் விடுபட்டவர்கள் நிவாரண தொகை பெறுவதற்காக விண்ணப்பம் வாங்கி அதனை பூர்த்தி செய்து கொடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர். முடிச்சூரில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story