நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறு பகுதியில் பட்டா வழங்கி அமைச்சர் சிறப்புரை !

நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறு பகுதியில், 814 பேருக்கு, பட்டா அமைச்சர்கள் எம்பி வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை மூலம், வீட்டுமனைகள் மற்றும் நில அளவீடு செய்து வழங்கும் பட்டாக்களை, பயனாளிகளுக்கு விரைவாக வழங்கி வருகிறது என்று, மாநில வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் K.K.S.S.R. இராமச்சந்திரன், நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறு பகுதியில், 814 பேருக்கு, பட்டாக்களை வழங்கி பேச்சு. நாமக்கல் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், இராசிபுரம் வட்டம், நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த, 814 பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி, இராசிபுரம் அடுத்த மங்களபுரம் பகுதியில் (28.2.2024-மாலை) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர். திருமதி. ச. உமா தலைமை வகித்தார். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, மாநில வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் K.K.S.S.R. இராமச்சந்திரன், மாநில வனத்துறை அமைச்சர் மருத்துவர். மா. மதிவேந்தன் ஆகியோர் நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த 814 பயனாளிகளுக்கு, 723 பட்டாக்களை வழங்கினர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 32 கோடியே 85 இலட்சமாகும். நாரைக்கிணறு, மத்ரூட், மங்களபுரம் ஆகிய பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அன்சர்வே பிளாக்கில் 2,471 ஏக்கர் நிலங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு நிலவரி திட்டத்தின் அடிப்படையில், அந்நிலத்தை அளவீடு செய்து, பட்டா வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து இந்நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் K.K.S.S.R. இராமச்சந்திரன், தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றார். அதுமட்டுமின்றி தினந்தோறும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றார். அந்த வகையில், மங்களபுரம் பகுதியில், 1922 முதல் பட்டா இல்லாமல் இருந்து வந்த இப்பகுதி மக்களின் 100 ஆண்டு கால கோரிக்கையினை ஏற்று 814 நபர்களுக்கு ரூ.32.84 கோடி மதிப்பீட்டில் 723 பட்டாக்களை வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். வருவாய்த் துறையின் மானிய கோரிக்கையின் போது இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என அறிவித்தோம். அதன்படி, இப்பகுதி மக்களின் 100 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பட்டா வழங்கியதன் மூலம் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தாலும் உங்களுக்கு நிலம் சொந்தமில்லாமல் இருந்த நிலை மாறி, இன்று முதல் உங்கள் நிலம் உங்களுக்கே சொந்தமாகி உள்ளது. இதன் மூலம் நீங்கள் விவசாயம் பெருக்கிட வங்கி கடன், மும்முனை மின்சாரம் உள்ளிட்டவற்றை பெற்றிட முடியும். நாமக்கல் மாவட்டத்தில், கடந்த மே 2021 முதல் நாளதுவரை 13,570 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்களின் கோரிக்கையான கூட்டுறவு கடன், மீதமுள்ளவர்களுக்கு பட்டா என அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் வருவாய்த் துறை அமைச்சர் K.K.S.S.R. இராமச்சந்திரன் தெரிவித்தார். தொடர்ந்து சிறப்புரை ஆற்றிப்பேசிய மாநில வனத்துறை அமைச்சர் டாக்டர். மா. மதிவேந்தன், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நீண்ட நாளாக இருந்து வந்த கோரிக்கை இன்று பட்டா வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இராசிபுரம் தொகுதிக்கு ரூ.854 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம், ரூ.140 கோடி மதிப்பீட்டில் போதமலைக்கு சாலை அமைக்கும் பணி, ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டும் பணி என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ. சுமன், வருவாய் கோட்டாட்சியர் (பொ) த. முத்துராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி, அட்மா குழுத் தலைவர் K.P. இராமசுவாமி, வருவாய் துறை அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story