சேலத்தில் பயங்கரம் சலூன் கடைக்காரர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

பைல்படம்
சேலம் பெரியகொல்லப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 38). இவர் கோரிமேடு பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் கருணாநிதியின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்துக்கு, கருணாநிதியின் அண்ணி சாந்தி உதவியதாக கூறி அவரை கழுத்தை அறுத்து கருணாநிதி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் கருணாநிதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருணாநிதி ஜாமீனில் வெளியே வந்தார். கருணாநிதிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. நேற்று மாலை கோரிமேடு கட்டுமான தொழிலாளர் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் அருகே உள்ள காலிமனையில் கருணாநிதி மது அருந்தியதாக தெரிகிறது. அங்கு கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென கருணாநிதியை சரமாரியாக வெட்ட தொடங்கினர்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கருணாநிதி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அப்படி இருந்தும் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி கருணாநிதியை வெட்டியது. கும்பலின் தாக்குதலில் நிலைகுலைந்த கருணாநிதி கீழே சாய்ந்தார். அப்படி இருந்தும் கொலை வெறி அடங்காத அந்த கும்பல் கருணாநிதி கழுத்தை கத்தியால் அறுத்தது. இதில் சம்பவ இடத்திலேயே கருணாநிதி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த 3 பேரும் அங்கிருந்து சாவகாசமாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர்கள் லட்சுமி பிரியா, நிலவழகன், கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் கொலை நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். தடயவியல் நிபுணர் வடிவேல் சம்பவ இடத்தில் கொலையாளிகளின் தடயங்களை சேகரித்தார். இதையடுத்து கருணாநிதி உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த இடத்தில் கிடந்த செல்போனை போலீசார் கைப்பற்றினர். அது கருணாநிதி செல்போன் என்பது தெரியவந்தது. அந்த செல்போன் எண்ணில் கருணாநிதியுடன் யாரெல்லாம் பேசி இருக்கிறார்கள் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அண்ணி கொலைக்கு பழியா? அண்ணியை கொலை செய்த வழக்கில் சில நாட்களுக்கு முன்புதான் கருணாநிதி ஜாமீனில் வந்துள்ளார். கருணாநிதி அவருடைய அண்ணியை கழுத்தை அறுத்துதான் கொலை செய்தார்.
தற்போது கருணாநிதியும் கழுத்து அறுக்கப்பட்டுதான் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவேதான் அவரது அண்ணி கொலைக்கு பழிக்குப்பழியாக கருணாநிதி தீர்த்துக்கட்டப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் கருணாநிதி அண்ணி தரப்பினர் சிலர் நேற்று சேலத்தில் இருந்து வெளியேறியதாக தெரிகிறது. அவர்கள் வெளியூர் சென்றார்களா அல்லது போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டனரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
