கோடை கால பாதுகாப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் !

கோடை கால பாதுகாப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் !

ஆலோசனை கூட்டம்

சேலத்தில் கோடை கால பாதுகாப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது.
கோடை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் தீத்தடுப்பு பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கோடை வெயில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கோடை காலங்களில் அவசிய காரணங்கள் தவிர வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும் போதிய அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். அதிகளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசி கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை குடிக்க வேண்டும். கோடை காலத்தில் குளிர்ந்த நீரால் குளிப்பது உடலுக்கு நன்மையை அளிக்கும். ஏற்காடு, கருமந்துறை, பாலமலை உள்ளிட்ட மாவட்டத்தில் அமைந்து உள்ள மலைப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். விவசாயிகள் கால்நடைகளை நிழற்பாங்கான இடங்களில் கட்டி உரிய அளவில் நீர் மற்றும் பசுந்தீவனங்களைக் கொடுத்து பராமரிக்க வேண்டும். கோடை காலத்தில் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், முன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கால்நடை துறையினரால் தெரிவிக்கப்படும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story