சிவகாசியில் டூவீலர் கூட செல்ல முடியாத சாலையால் தவிக்கும் பொதுமக்கள்...
சிவகாசி அருகே டூவீலர் கூட செல்ல முடியாத சாலையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் 24 வார்டுகள் உள்ளன.இதில் பெரும்பாலான வார்டுகளில் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் நடைபெற்றுக் கொண்டிரிக்கின்றன.இன்னும் சில வார்டுகளில் பணிகள் தொடங்கப்படாத நிலை காணப்படுகின்றது.இதனால் வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் அடிப்படை வசதிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.குறிப்பாக 21 வது வார்டில் அடிப்படை வசதிகளான வாறுகால்,சாலை வசதி இன்றி மக்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இந்த வார்டில் சுமார் 700 குடியிருப்பு வீடுகள் உள்ளன.பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் நிறைந்த இந்த வார்டில்,வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கியும் அந்தப் பணிகள் தொடங்காத நிலை காணப்படுகின்றது.சாலை அமைக்கவும் வாறுகால் கட்டவும் நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டு 2ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணிகள் தொடங்கப்படாத நிலை இருப்பதால் இந்த வார்டு மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.இந்த சாலையின் அவல நிலையை கண்டு அவசரத்துக்கு வரும் ஆட்டோ ஓட்டுநர் கூட இந்த தெருவுக்குள் வர தயக்கம் காட்டுகின்றனர்.அதிகாரிகள் உடனடியாக இந்த வார்டில் ஆய்வு செய்து சாலைகளை புதுப்பிக்கவும் வாறுகால் கட்டவும் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.