நீலகிரியில் பா.ஜ.க., அ.தி.மு.க., ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல்
பா.ஜ.க.,வினருக்கு ஊட்டி காஃபி ஹவுஸ் சந்திப்பில் இருந்து ஸ்டேட் வங்கி வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டிருந்நதது.
காலை சுமார் 7.30 மணிக்கெல்லாம் வேட்பாளர் எல்.முருகன் கோத்தகிரியை அடுத்த பேரகணி படுகர் இன மக்களின் குலதெய்வ கோவிலில் காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினார். அதை தொடர்ந்து ஊட்டியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை வருகைக்காக காத்திருந்தார்.
10.30 மணியளவில் ஊட்டி சந்தை கடை மாரியம்மன் கோவிலில் இருவரும் தரிசனம் செய்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்வதாக கூறப்பட்டது. ஆனால் அண்ணாமலை வருகை தாமதமானதால் மதியம் 12.30 மணிக்கு தான் ஊட்டி சந்தை கடை மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனுக்கு அதே காஃபி ஹவுஸ் சந்திப்பில் இருந்து ஸ்டேட் வங்கி வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய நண்பகல் 11 மணி முதல் 01 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்நதது.
சுமார் 12 மணியிலிருந்தே இரண்டு கட்சியினரும் காஃபி ஹவுஸ் சந்திப்பில் கூடத்தொடங்கினர். இரண்டு கட்சி தொண்டர்களிடையை வாக்கு வாதம் ஏற்பட்டது. சுமார் 12.50 மணியளவில் பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகன் மற்றும் தலைவர் அண்ணாமலை இருவரும் வாகனத்தில் காஃபி ஹவுஸ் சந்திப்பிற்கு வந்து பேரணியாக ஆட்சியர் அலுவலகம் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அப்போது ஆட்சியர் அலுவலகம் வந்த அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் விநோத், வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வன் ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தியதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பா.ஜ.க., அ.தி.மு.க., தொண்டர்களுக்கிடையே வாக்கு வாதம் முற்ற, அதனை தடுக்க நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில் போலீஸார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 200மீ தொலைவில் சிறிய தடியடி நடத்தினர். வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு அங்கு வந்த மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க., தொண்டர்கள் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சுந்திரவடிவேல் அண்ணாமலையிடம் வந்து அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கவே தடியடி நடத்தியதாக தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக அண்ணாமலை அறிவிக்க தொண்டர்கள் கலைந்து சென்றனர்.
ஆனாலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் தேர்தல் நடத்தும் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக பா.ஜ.க., அண்ணாமலை தெரிவித்தார். அதேபோல் அ.தி.மு.க., வினரும் தடியடிக்கு எதிராக காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட, காவல் கண்காணிப்பாளர் சுந்திரவடிவேல் அவர்களிடமும் தடியடி நடத்தியதற்கான காரணத்தை கூற அவர்களும் அதை ஏற்று கலைந்து சென்றனர்.
இப்படியாக பெரும் பரபரப்புக்கு இடையே பா.ஜ.க., மற்றும் அ.தி.மு.க., வினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
