தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 19-ந் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமாக அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் சட்டமன்ற தொகுதிவாரியாக பிரித்து 6 தனித்தனி பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதில் மொத்தம் 400 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் சுமார் 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை 24 மணி நேரமும் பார்வையிடும் வகையில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு உள்ளது. இதனை வேட்பாளர்களின் முகவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் அங்கேயே கண்காணித்து வருகின்றனர். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு,
டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான லட்சுமிபதி அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக 6 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 6 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கைக்காக தலா 14 மேஜைகள் போடப்படுகின்றன.
ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு வாக்கு எண்ணிக்கை அலுவலர், ஒரு உதவியாளர் மற்றும் ஒரு நுண்பார்வையாளர் வீதம் மொத்தம் 252 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும், தயார் நிலையில் வைத்திருப்பதற்காக 20 சதவீதம் கூடுதல் அலுவலர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களது பட்டியல் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த அலுவலர்கள் எந்தெந்த சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு பணிக்கு செல்ல வேண்டும் என்பது குறித்து வருகிற 17-ந் தேதி சுழற்சி (ரேண்டம்) முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். இதைத் தொடர்ந்து அவர்களுக்கான பயிற்சி வகுப்பு வருகிற 20-ந் தேதிக்கு பிறகு நடக்கிறது. அவர்களுக்கு மூன்று கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு நடைபெறும் இறுதி கட்ட பயிற்சியின்போது, அவர்கள் எந்தெந்த மேஜையில் பணியாற்ற வேண்டும் என்பது ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்படும். இதேபோன்று வாக்கு எந்திரங்களை பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்வது,
வாக்கு எண்ணும் பணி முடிந்ததும் எந்திரங்களை மீண்டும் பாதுகாப்பு அறைக்கு கொண்டு வருவது உள்ளிட்ட இதர பணிகளை செய்வதற்கான பணியாளர்களும் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை பொறுத்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை எத்தனை சுற்றுகள் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும்.