திருப்பூரில் விவசாயிகள் சாலையோரங்களில் கடை வைத்து விற்பனையில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தை அருகே சாலையோரங்களில் விவசாயிகள் கடை வைத்து விற்பனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் உழவர் சந்தைக்கு அருகாமையில் வியாபாரிகள் கடை அமைப்பதால் தென்னம்பாளையத்தில் விளை பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பதாக விவசாயிகளும் இண்று அதிகாலை சாலையோரங்களில் கடை அமைத்து விற்பனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில் உழவர் சந்தை மற்றும் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. உழவர் சந்தையில் தினந்தோறும் அதிகாலை திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் விளை நிலங்களில் விளையும் பொருட்களை கொண்டு வந்து வேளாண்துறையிடம் பதிவு பெற்று உழவர் சந்தையில் கடைகள் அமைத்து வருகின்றனர். பல்லடம் சாலையில் சாலையோரம் வியாபாரிகள் அதிகாலையில் கடை அமைத்து காய்கறிகளை விற்பனை செய்வதால் பொதுமக்கள் சந்தைக்குள் வராமலே சாலையோரத்தில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கி செல்வதால் உழவர் சந்தையில் விவசாயிகள் விளை பொருட்கள் விற்பனையாகாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பலமுறை புகார் தெரிவித்தும் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் , எனவே சாலையோர கடைகளுக்கு போட்டியாக இன்று அதிகாலை விவசாயிகளும் பல்லடம் சாலையில் சாலையோரத்திலேயே தங்கள் விளை பொருட்களை வைத்து விற்பனை செய்தனர். இதனால் பல்லடம் சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க மறுத்த விவசாயிகள் தொடர்ந்து சாலையோரங்களிலேயே கடை நடத்தினர். சாலையோர கடைகளை அப்புறப்படுத்தும் வரை தொடர்ந்து சாலையோரங்களிலேயே தாங்களும் கடை நடத்தப் போவதாக விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயிகளின் இந்த போராட்டம் காரணமாக இன்று சாலையோர வியாபாரிகள் கடை அமைக்க காவல்துறை மறுத்தனர். இந்நிலையில் உழவர் சந்தைக்கு 100 மீட்டருக்கு அப்பால் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் , விவசாயிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத நிலையில் கடைகள் அமைத்து வரக்கூடிய நிலையில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலும் , மோதல் சூழ்நிலை உருவாக்கி சட்ட ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் விவசாயிகள் செயல்படுவதாக சாலையோர வியாபாரிகள் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரப்படும் என உறுதி அளித்தனர்.
Next Story