ஊத்துமலையில் மழையால் உளுந்து சாகுபடி பாதிப்பு
சேதமடைந்த உளுந்து பயிர்களுடன் விவசாயிகள்
ஊத்துமலை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகளுக்கு பெரும் பொருளிழப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகேயுள்ள பலபத்திரராமபுரம் கிராமத்தில் விவசாயிகள் மானாவாரி வயல்களில் உளுந்து சாகுபடி செய்திருந்தனா். அறுவடை காலம் நெருங்கும் நிலையில் அண்மையில் பெய்த கனமழையால் ஊத்துமலை பகுதியில் உள்ள அனைத்து மானாவாரி வயல்களும் வெள்ளத்தில் மூழ்கியது. தொடா்மழை காரணமாக வயல்களில் நீண்ட நாள்கள் தண்ணீா் தேங்கி என்றதால் செடியிலேயே முளைக்கத் தொடங்கியது. இதனால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செல்வு செய்து அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனா். இவா்களில் பெரும்பாலான விவசாயிகள் தங்களிடமிருந்த சிறு, சிறு நகைகளை வங்கியில் அடமானம் வைத்தும், பலரிடம் கடனாக பெற்றும் சாகுபடி செய்ததால் பெரும் நஷ்டத்தில் உள்ளனா். மழையால் சாகுபடி இழப்பை சந்தித்த தங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், தங்களின் வாழ்வாதாரம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதற்கு தமிழக அரசு துணைபுரிய வேண்டும் என பலபத்திரராமபுரம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
Next Story