வேளாங்கண்ணியில் ஏழு பேரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக குற்றசாட்டு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஏழு பேரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பது தொடர்பாக கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணியில் ஏழு பேரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக குற்றம் சாட்டி ஜமாத்தார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார்; ஜமாத்தை மீறி குற்ற வழக்கில் ஈடுப்பட்டு வருவதால் ஜமாத் உறுப்பினரில் இருந்து நீக்கியுள்ளதாகவும், ஜமாத் தலைவராக ஆவதற்காக பொய்யான புகாரை அளித்துள்ளதாக ஜமாத்தார் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி முஸ்லிம் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் ஜமாத்தாருக்கும், அங்குள்ள சிலருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது காவல் நிலையம் வரை புகார் சென்றது. இரு தரப்பினரையும் அழைத்து காவல்துறை மற்றும் தாசில்தார் முன்னிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதிகாரிகள் முன்பே இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நிலவியதால் அவர்களை இரண்டாம் கட்டமாக அழைத்து பேசுவோம் என்று வெளியேற்றினார்கள். இந்த சூழ்நிலையில் நேற்று ஏழு பேர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து, தங்களை , ஜமாத் நிர்வாகத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து வேளாங்கண்ணி முஸ்லிம் தெருவில் உள்ள பள்ளிவாசலில், அங்குள்ள அனைத்து இஸ்லாமியர்களும் கலந்து கொண்டு கூட்டம் நடைபெற்றது இதில், இஸ்லாமிய மார்க்கத்துக்கு எதிராகவும் ஜமாத்தார் மீது கலங்கம் விளைவிக்கும் வகையில் சில நபர்கள் செயல்பட்டு வருவதால், அவர்கள் மீது அரசு சரியான முறையில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேளாங்கண்ணி பள்ளிவாசலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பொய் புகார் கூறும் சம்ஸ் தப்ரோஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கூட்டாக இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இஸ்லாத்தில் குற்ற பின்னணியில் உள்ளவர்களை ஜமாத்தில் இருந்து நீக்குவது இயல்பானது என்றும் அவர்கள் ஒரு போதும் ஜமாத் தலைவராக ஆக முடியாது என்னும் அனைத்து இஸ்லாமியர்களும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story