தஞ்சாவூர் அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு ....

தஞ்சாவூர் அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு ....

திருவள்ளுவர் சிலை திறப்பு

தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் 15 அடி உயர திருவள்ளுவர் சிலை சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது.

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வெள்ளாஞ்செட்டித் தெருவிலுள்ள தமிழ்த்தாய்க் கோட்டத்தில் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் 15 அடி உயர திருவள்ளுவர் சிலை சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. இச்சிலையைப் புதுச்சேரி புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து திறந்து வைத்தார். இது குறித்து தமிழ்த்தாய் அறக்கட்டளைத் தலைவர் உடையார்கோவில் குணா தெரிவித்தது: ஆறு அடி உயர பீடத்தில் 9 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 15 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான இச்சிலை முழுவதும் மிகப்பெரிய கருங்கல்லால் 3 ஆயிரம் கிலோ எடையுடையது. இது, உலகின் இரண்டாவது மிகப் பெரிய கருங்கல்லில் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலையாகப் போற்றப்படுகிறது. மேலும், திருக்குறள் முதல் அடியில் 4 சீர்களைக் குறிக்கும் வகையில் சிலையின் தலை முடி 4 முடிச்சுகளாகவும், இரண்டாவது அடியில் 3 சீர்களைக் குறிக்கும் விதமாக தாடி 3 அடுக்குகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இச்சிலை கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி கிருஷ்ணா சிற்பக்கூடத்தில் தயார் செய்யப்பட்டது என்றார் குணா. இவ்விழாவில் மாரியம்மன் கோவில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தனசேகர், தஞ்சாவூர் கூட்டுப் பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் சு.கார்த்திகேயன், ஞா.கருணாகரன், முனைவர் தி. நெல்லையப்பன், வழக்குரைஞர் சீனி. சந்திரசேகர், ஆய்வாளர் இராம.சம்பந்தமூர்த்தி, பாவலர் ப.கோ. நாராயணசாமி, கவிஞர் செ.வ.மதிவாணன், பாவலர் கோ.மலர்வண்ணன், கவிஞர் பூவை சாரதி, தஞ்சாவூர் இராம. சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story