அரசு மாணவ மாணவிகளின் விடுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

அரசு மாணவ மாணவிகளின் விடுதியில் குடிநீர் சுத்திகரிப்பு  நிலையம் திறப்பு

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தர்மபுரி மாவட்டம், ஒட்டப்பட்டியில் டாக்டர் அம்பேத்கார் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் புதியதாக அமைக்கப்பட்ட 2 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஒட்டப்பட்டியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவ விடுதியில் 420 ஆதிதிராவிடர் நல மாணவர்கள் பயன்பெறும் வகையில் மொத்தம் 28 அறைகளுடன், சுமார் 200 மாணவர்கள் உணவு அருந்தும் வகையிலான உணவு கூடம், சமையல் அறை, பொருட்கள் வைப்பு அறை உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் இவ்விடுதி கட்டப்பட்டுள்ளது. மாணவிகள் விடுதியில் 100 மாணவிகள் உள்ளனர். மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் ரூ.20,000 மதிப்பிலான 2 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் செயல்பாடு இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மத்திய, மாநில அரசு நடத்தும் போட்டித்தேர்வுக்கு பயில மாணவ விடுதி நூலகத்திற்கு ரூ.10,000 மதிப்பிலான TNPSC போட்டி தேர்வு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயின்று போட்டி தேர்வுகள் எழுதி வெற்றிபெற்று மத்திய, மாநில அரசு பணிகள், வங்கிகள், பொதுநிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியில் சேர்ந்து நாட்டிற்கும் வீட்டிற்கும் இந்த மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபடவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி. இஆப. மாணவ,மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாகுல் அமித், நல்லம்பள்ளி வட்டாட்சியர் பார்வதி, தனி வட்டாட்சியர் ஆதிதிராவிடர்நலம் வள்ளி, மாணவர் விடுதி காப்பாளர்கள் சாமிநாதன், மகாலிங்கம், மாணவிகள் விடுதி காப்பாளினி கனிமொழி, வருவாய் ஆய்வாளர் முருங்கானந்தம் மற்றும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story