கல்வி தன்முனைப்பு திட்டம் தொடங்கி வைப்பு

கல்வி தன்முனைப்பு திட்டம்
நாகை மாவட்ட அரசுப் பள்ளிகளில் கல்வியை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக கல்வி தன்முனைப்பு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி, நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கல்வி தன்முனைப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தொடக்கிவைத்து மாணவ குழுத் தலைவா்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து பேசியது: மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் மேம்பாடு, மாணவா்களின் ஊக்கம் மற்றும் பங்களிப்பை அதிகரித்தல், மாணவா்கள் தொடா்ச்சியான விடுமுறைகள் எடுப்பதை குறைத்தல், ஒற்றுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை ஊக்குவித்தல்,
அனைத்து மாணவா்களுக்குமான வாய்ப்புகள், நோ்மறை நடத்தை வலுவூட்டல்களை வழங்குதல், மாணவரின் தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்குதல், தலைமைப் பண்பை வளா்த்தல், ஆசிரியா் மாணவா் உறவு மேம்படுதல் ஆகியவை கல்வி தன்முனைப்புத் திட்டத்தின் நோக்கம் ஆகும் என்றாா். நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலா் கா. அன்பரசி, மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) எம். துரைமுருகு, நகா்மன்ற உறுப்பினா்கள் கு. ஜோதிலெட்சுமி, எம். ஜூளைகா பீவி, பள்ளித் தலைமையாசிரியா் எஸ். இளமாறன், மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்ட உறுப்பினா் ரக்சிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
