ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு விழா; காளை வடிவத்தில் நின்ற மாணவர்கள்

அலங்காநல்லூர் கீழக்கரையில் “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிகழ்வினை 1000 மாணவ,மாணவிகள் காளை வடிவத்தில் நின்று நேரலையில் கண்டுகளித்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 24ஆம் தேதி காலை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் 66.80 ஏக்கர் நிலப்பரப்பில் 77,683 சதுர அடி பரப்பளவில் ரூ 62.78 கோடி மதிப்பீட்டில் உலக தரத்துடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்து ஏறு தழுவுதல் போட்டிகளை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்த நிகழ்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் தனலட்சுமி பல்கலைக்கழகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வினை சுமார் 1,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். அப்போது தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் காளை வடிவத்தில் மாணவர்கள் அணிவகுத்து தொடக்க விழாவினை பார்வையிட்டனர். மேலும் தொடர்ந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பார்வைக்காக மாலை 5 மணி அளவில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் மறுஒளிபரப்பும் செய்யப்பட்டது.
