புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு
பூந்தமல்லி, சென்னீர்குப்பம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.1.26 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்களின் திறப்பு விழா நடந்தது.
பூந்தமல்லி, சென்னீர்குப்பம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.1.26 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடங்களை பூந்தமல்லி கிருஷ்ணசாமி எம்எல்ஏ நேற்று திறந்து வைத்தார்.
பூந்தமல்லியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட் கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வகுப்பறைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று பூந்தமல்லி நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில், துணைத் தலைவர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் லதா, பூந்தமல்லி நகர செயலாளர் ஜி.ஆர். திருமலை, மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில் வட்ட செயலாளர் பழனி, நகர் மன்ற உறுப்பினர் நீலாவதி ஐயப்பன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சென்னீர்குப்பத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 70.28 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் பூவை ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார். இதில் ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரிகந்தன், ஒன்றிய திமுக செயலாளர் கமலேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கண்ணியப்பன், டில்லி குமார், ஊராட்சி மன்ற தலைவர் கோடீஸ்வரி அன்பு, திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல செம்பரம்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகளையும் கிருஷ்ணசாமி எம்எல்ஏ திறந்து வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட், ஒன்றிய கவுன்சிலர் பிரியா செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.