சேலத்தில் புதிய கோர்ட்டுகள் திறப்பு விழா

சேலத்தில் புதிய கோர்ட்டுகள் திறப்பு விழா

விழாவில் கலந்து கொண்டவர்கள் 

குடும்பத்தினரிடையே சகிப்புத்தன்மை குறைவதால் விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பு ஐகோர்ட்டு நீதிபதி சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சேலம் அஸ்தம்பட்டி கோர்ட்டு வளாகத்தில் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் புதிய தனி கோர்ட்டு, வக்கீல்கள் அறை மற்றும் ஆத்தூர் கூடுதல் அமர்வு கோர்ட்டு ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வரவேற்றார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுப்பிரமணியன், இளந்திரையன், மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றியதுடன் புதிய கோர்ட்டுகள், வக்கீல்கள் அறையை திறந்து வைத்தனர். விழாவில் நீதிபதி சுப்பிரமணியன் பேசியதாவது:- புதிய கோர்ட்டுகளை திறப்பதால் மகிழ்ச்சி ஏற்படலாம். ஆனால்,

தற்போது திறக்கப்பட்டுள்ள வன்கொடுமை சிறப்பு கோர்ட்டுக்கு வேலை இல்லாத நிலை வந்தால் தான் உண்மையான மகிழ்ச்சி. கவலை தரும் கோர்ட்டாக குடும்ப கோர்ட்டுகள் உருவாகி வருகின்றன. சென்னையில் மட்டும் 8 குடும்ப நல கோர்ட்டுகளில் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நடந்து வருகின்றன.

குடும்பத்தினரிடையே சகிப்புத்தன்மை குறைவதால் நாளுக்கு நாள் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. மூத்த வக்கீல்களிடம் கற்கும் அனுபவம் என்பது சட்டப்புத்தகங்களில் கிடைக்காது. ஒவ்வொரு நாளும் இளம் வக்கீல்கள் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நீதிபதி இளந்திரையன் பேசும் போது, ‘வட்டார தலைநகரங்களில் இருந்து மாவட்ட தலைநகருக்கு செல்வதால் பொதுமக்களுக்கு ஏற்படும் நேர விரயம் மற்றும் அலைச்சலை தடுக்கும் வகையில் கூடுதல் கோர்ட்டுகள் திறக்கப்படுகின்றன.

வக்கீல்களின் பணி கோர்ட்டுகளுடன் முடிந்துவிடக்கூடாது. சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர், ஆதரவற்றோரின் உரிமைகளை பெற்றுத்தருவது, சட்ட விழிப்புணர்வு தருவது உள்ளிட்ட சமூக பணிகளிலும் ஈடுபட வேண்டும். அப்போது தான் உங்களின் பணியில் கிடைக்கும் நிறைவு உண்மையானதாக இருக்கும்’ என்றார். உண்மையானதாக இருக்கும் நீதிபதி மஞ்சுளா பேசும் போது, ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்துக்குள் கிடைக்கும் நீதிதான் உண்மையானதாக இருக்கும். உரிய காலத்துக்குள் நீதி பெற கூடுதல் கோர்ட்டு உதவும்.

இதில் வக்கீல்களின் ஒத்துழைப்பும் அவசியம். இருதரப்பு ஒத்துழைப்புடன் விரைவாக நீதியை பெற முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை கோர்ட்டுகள் திறந்தாலும் போதுமானதாக இருக்காது’ என்றார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story