மறைமலை நகரில் புதிய நிழற்குடை செங்கை எம்.எல்.ஏ., திறந்து வைப்பு.
மறைமலை நகர் என்.எச்., -2 பகுதியில், பேருந்து நிறுத்தத்தில் இருந்த சிமென்ட் ஓடு நிழற்குடை, கடந்த ஆண்டு பெய்த மழையில் உடைந்து, சாய்ந்த நிலையில் இருந்தது. இதனால், மழை மற்றும் வெயில் காலங்களில், பயணியர் அவதிப்பட்டனர்.
புதிய நிழற்குடை வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் மாதம் நடந்த மறைமலை நகர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில், இதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022- - 23ம் ஆண்டு நிதியில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில், நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை, கடந்த ஜூன் மாதம் நடந்தது.
கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று நிழற்குடையை செங்கல்பட்டு தி.மு.க., -- எம்.எல்.ஏ., வரலட்சுமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.