திறன் மேம்பாட்டு பயிற்சி முதல்வர் துவக்கி வைப்பு
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், 23 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு கட்டுமான கழகம் வாயிலாக, ஆண்டுதோறும் 4,000 தொழிலாளர்களுக்கு ஏழு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியும், 1,000 தொழிலாளர்களுக்கு மூன்று மாதம் திறன் பயிற்சியும் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 5.86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக கொத்தனார், தச்சர், பிளம்பர், எலக்ட்ரீஷியன் ஆகிய தொழில் பயிற்சிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ள 50 தொழிலாளர்களுக்கு ஏழு நாட்கள் உதவித்தொகையுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியும் 50 தொழிலாளர்களுக்கு மூன்று மாதம் திறன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
மேலும், உணவு, தங்கும் வசதிகள் இலவசம். இதற்கு, 9.75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சியில் அடங்கிய செங்கண்மால் கிராமத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய வளாகத்தில் இயங்கும் தமிழ்நாடு கட்டுமான கழகம் அலுவலகத்தில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதற்கான துவக்க விழா நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்திலிருந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். அதே நேரத்தில் தையூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், கலெக்டர் ராகுல்நாத், எம்.எல்.ஏ பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், ஒன்றிய குழு துணை தலைவர் சத்யா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். இதில், கட்டுமான கழக இயக்குனர் தர்மசீலன் உட்பட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.