சுவாமி விவேகானந்தர் பண்பாட்டுப் படிப்பகம் திறப்பு
சுவாமி விவேகானந்தர் பண்பாட்டுப் படிப்பகம் திறப்பு
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆண்டகளூர்கேட் அருள்மிகு காசி விநாயகர் ஆலய வளாகத்தில் சர்வதேச யோகா தினம், ஸ்ரீராமகிருஷ்ணனர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் திருஉருவப் பட திருமாடத் திருக்கோவில், சுவாமி விவேகானந்தர் பண்பாட்டுப் படிப்பகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் அருள்மிகு காசி விநாயகர் இயற்கை நல்வாழ்வு மையம் அறக்கட்டளை, ராசிபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை, கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர்கள் சங்க நாமக்கல் கிளை ஆகியவற்றின் சார்பில் முன்னதாக நடைபெற்ற சர்வதேச யோகா தினவிழாவில், காசி விநாயகர் இயற்கை நல்வாழ்வு மையம் தலைவரும், உலக சமுதாய சேவா சங்க மண்டல துணைத் தலைவருமான கை.கந்தசாமி வரவேற்றார்.
ஒய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் மு.ஆ.உதயகுமார், உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் உழவன் ம.தங்கவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ராசிபுரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவர் மு.செளந்திரராஜன் யோகாசனம், உடற்பயிற்சிகள் குறித்து ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு செய்து காண்பித்தார். இதனை தொடர்ந்து கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர்கள் சங்க நாமக்கல் கிளை துணைத் தலைவர் என்.மாணிக்கம் தலைமையில், ஸ்ரீராமகிருஷ்ணனர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் திருஉருவப் பட திருமாடத் திருக்கோவில், சுவாமி விவேகானந்தர் பண்பாட்டுப் படிப்பகம் திறப்பு விழா போன்றவை நடைபெற்றன.
இதில் சேலம் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் ஆஸ்ரமம் செயலாளர் சுவாமி யாதாத்மானந்தர் மகராஜ் பங்கேற்று, திரு உருவப்பட திருமாடத் திருக்கோவிலை திறந்து வைத்து, பண்பாட்டுப் படிப்பகத்தையும் திறந்து வைத்துப் பேசினார். இதில் பேசிய அவர், கோபம், பொறாமையை தவிர்த்து மனித்தை உணர்ந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் ஒவ்வொரும் தங்களுக்குள் உள்ள திறனை கண்டறிந்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும். அனைவரும் ஐபிஎஸ்., ஐஏஎஸ் அதிகாரிகளாக, மருத்துவர்கள்,பொறியாளர்களாக உருவாக வேண்டும் என்பதுடன் ஆசிரியர்களாக உயர வேண்டும் என்ற சிந்தனை வேண்டும். ஏனென்றால் ஆசிரியர்கள் தான் தன்னலம் இன்றி, நல்ல மனிதர்களை உருவாக்கும் பணி. சாதி, மதத்தை கடந்து மனிதத்துவத்துக்கு பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் விழாவில் பங்கேற்று மாணவ மாணவியர்களை பாராட்டி புத்தகங்கள் வழங்கிப் பேசினார். அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் விவேகானந்தர் குறித்த புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர்கள் சங்க நாமக்கல் கிளை இணைச்செயலர் மா.தில்லை சிவக்குமார், சேலம் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் ஒருங்கிணைப்பாளர் பி.திருவேங்கடம், தொடக்க வேளாண் வங்கி செயலரும், ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர்கள் சங்க நாமக்கல் கிளை இணைச்செயலருமான கே.அருணாசலம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.