குமரி மாவட்டத்தில் தொடர் மழை: 14 வீடுகள் இடிந்து சேதம்
கோப்பு படம்
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சிற்றாறு-1, சிற்றாறு-2 மற்றும் மாம்பழத்துறையாறு, சோழன் திட்டை அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன.
இதனால் அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப் பட்டு வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது 41.91 அடியாக உள்ளது. 77 அடி கொள்ள ளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 71.70 அடி நீர்மட்டம் உள்ளது. அணைகள் குறிப்பிட்ட அளவை நெருங்கி வருவதால், பொதுப்பணித்துறையினர் அணைகளுக்கு வரும் நீர்வரத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையில் கல்குளம் தாலுகாவில் நேற்று ஒரே நாளில் மழைக்கு 14 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. குமரி மாவட்டத்தில் தற்போதைய தொடர் மழையில் ஏற்கனவே 125-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.