தொடர் மழை எதிரொலி: தக்காளி விலை திடீர் உயர்வு
தக்காளி
திண்டுக்கல் சுற்று வட்டாரத்தில் வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, எம்.எம். கோவிலூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இவை திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரத்தில் தக்காளி கிலோ ரூ.12க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பருவமழை அவ்வப்போது மாவட்டத்தில் பரவலாக பெய்தது. இதனால் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டது. செடியில் இருந்து கீழே விழுந்து அடிபட்டு காய்கள் வருகிறது. இதனால் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மார்க்கெட்டில் பெட்டி ரூ.500 வரை ஏலம் போனது. சில்லறை கடைகளில் கிலோ ரூ. 25க்கு விற்கப்படுகிறது.
திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்று 2 டன் தக்காளி வரத்து வந்துள்ளது. ஒரு கிலோ ரூ.20க்கு விற்கப்படுகிறது. மழை கார ணமாக தக்காளி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை நீடித்தால் இன்னும் விலை உயரும்.