ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
சுற்றுலா பயணிகள்
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை வீசி வருகிறது. அதேநேரத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் குளுகுளு பிரதேசங்களை நோக்கியும், சுற்றுலா தலங்களுக்கும் படையெடுத்து வருகின்றனர். இதனிடையே கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், வார விடுமுறை தினம் என்பதாலும் நேற்று முன்தினமே ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்,
வேன்களில் ஏற்காட்டிற்கு வர தொடங்கினர். பின்னர் அவர்கள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த அறைகளில் குடும்பத்தினருடன் தங்கினர். பெரும்பாலான தங்கும் விடுதிகளில் அனைத்து அறைகளும் நிரம்பியதால் முன்பதிவு செய்யாமல் ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் அறைகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். ஒருசிலர் கூடுதல் கட்டணம் செலுத்தி அறைகள் எடுத்து தங்கினர்.
கோடை விடுமுறையால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நேற்றும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அவர்கள் அண்ணா பூங்கா, சிறுவர் பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், தாவரவியல் பூங்கா, சேர்வராயன் மலைக்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிபார்த்தனர். படகு இல்லத்தில் குடும்பத்தினருடன் ஆனந்தமாக சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மலர்க்கண்காட்சிக்காக அண்ணா பூங்காவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளில் பதியம் போடப்பட்ட வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்குவதையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்ததோடு தங்களது செல்போன்களில் புகைப்படமும், செல்பியும் எடுத்து கொண்டனர்.