தென்பெண்ணை ஆற்றில் அதிகரித்து வரும் ரசாயன நுரைகள்
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்படிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு 548 கன அடி நீர் வரத்து வந்ததால் அதே அளவு 548 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று நீர்வரத்து அதிகரித்து அணைக்கு வினாடிக்கு 1234 கன அடி நீர் வரத்தாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 1220 கன அடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டும் வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் வெளியேறும் நீரில் குவியல் குவியலாக ரசாயன நுரைகள் வந்தவண்ணம் உள்ளது. ஒவ்வொரு முறையும் நீர்வரத்து அதிகரிக்கும் போதும் ஆற்றில் ரசாயன நுரைகள் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.