திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

சாலையோரத்தில் குவிந்துள்ள குப்பைகள் 

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அதிகாரிகள் பிளாஸ்டிக்கை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு சட்டசபையில் 'பிளாஸ்டிக்கு எதிரான மக்கள் பிரசாரம்' செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுமக்களிடையே பிரசாரம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் 2021ல் 'மீண்டும் மஞ்சப்பை' என்ற மக்கள் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். மாநிலம் முழுதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் நடத்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகம், பஸ் நிலையம் மற்றும் திருத்தணி முருகன் கோவில் என நான்கு இடங்களில் மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் இந்த மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தில் 10 ரூபாய் செலுத்தி ஒரு மஞ்சப் பையை பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் நடமாட்டத்தை குறைக்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் கடை கடையாகச் சென்று பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதமும் விதித்தனர்.

பங்க் கடை, பேன்சி ஸ்டோர், மளிகை கடை, உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்தால் அதிகாரிகள் ஆய்வு செய்து, அபராதம் விதிப்பதுடன், இனி தொடர்ந்து உபயோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து வருகின்றனர். ஆனால், காலப்போக்கில் பிளாஸ்டிக் பைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிள் அலட்சியம் காட்டியதால் தற்போது ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை அதிகரித்துள்ளது.

மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வும் பெயரளவிற்கு நடப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு அதிகாரி ஒருவர் கூறுகையில்' தமிழக அரசு எங்களுக்கு மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வுக்கு மட்டும் தான் உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி, ஊராட்சி உட்பட அரசு அதிகாரிகள் தான் எடுக்க வேண்டும்' என்றார்.

Tags

Next Story