சேலத்தில் திமுக சார்பில் இளைய தலைவர் மாரத்தான் போட்டி!!

Young Leaders Marathon 2024
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் மேற்கு மாவட்டம் இடங்கனசாலை நகர திமுக சார்பில் சமூக நீதி விழிப்புணர்வு குறித்து இந்திய அளவிலான இளைய தலைவர் மாரத்தான் 2024 நடைபெற உள்ளது. சேலத்தில் சந்தைத்திடல் காடையாம்பட்டி இடங்கனசாலை நகராட்சி சந்தைத்திடல் பகுதியில் வரும் 15 ஆம் தேதி காலை 6 மணிக்கு சேலம் மேற்கு மாவட்ட நகர திமுக சார்பில் இளைய தலைவர் மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. இந்த விழாவினை இடங்கனசாலை நகர திமுக செல்வம் தலைமையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி தொடங்கிவைக்கவுள்ளார்.
இந்த மாரத்தான் போட்டியில் ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்கள் பிரிவில் 20 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் பங்கேற்க 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் என்றும் 13 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் பங்கேற்க 12 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டத்தில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பெண்கள் பிரிவில் 13 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டத்தில் 18 வயதிற்கு மேல் நிரம்பியவர்களும் 8 கிலோமீட்டர் மற்றும் 6 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டத்தில் 12 வயதிற்கு மேல் நிரம்பியர்களும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் பிரிவில் முதல் பரிசாக 25 ஆயிரமும் பெண்கள் பிரிவில் முதல் பரிசாக 15 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி இந்த மாரத்தான் போட்டியில் அனைத்து பிரிவிலும் முதல் 10 இடங்களை பிடிக்கும் அனைவருக்கும் சுழற் கோப்பை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க முதலில் முன்பதிவு செய்யும் 1000 பேருக்கு மட்டுமே டீ சர்ட் மாரத்தான் கிட் ஜூஸ் ஸ்னாக்ஸ் ஆகியவை வழங்கப்படும் எனவும் மாரத்தான் போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் காலை உணவுடன் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதும் மேலும் 4 ஆம் இடம் முதல் 10 ஆம் வரை இடம் பிடிக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி சிறப்பு பரிசு வழங்கி சிறப்பிக்க உள்ளார்.