இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் வீரர் தவிப்பு !

இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் வீரர் தவிப்பு !

 மகாராஜா

ஓட்டப்பிடாரம் அருகே பயிற்சிக்காக அமெரிக்கா செல்ல நிதியுதவி இல்லாமல் தவித்து வரும் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் வீரர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது கே. துரைசாமிபுரம் கிராம். இந்த கிராமத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் மகாராஜா. (வயது 26). பிறவியில் இருந்தே பார்வை குறைபாடு கொண்ட மகாராஜாவுக்கு 8 வது வயதில் முழுமையாக பார்வை பறிபோனது.இதனால், பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் படிப்பை முடித்த இவர், மதுரை தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் படித்துள்ளார்.

கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட மகாராஜா,2012 ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்ட அணியிலும், 2017 ஆம் ஆண்டில் தமிழக அணயிலும் இடம்பெற்றார்.தொடர்ந்து, திறமையை வெளிப்படுத்திய அவருக்கு, இந்திய பார்வையற்றோர் அணியில் கடந்த ஆண்டு இடம் கிடைத்தது. இங்கிலாந்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த உலக பார்வையற்றோருக்கான விளையாட்டுப் போட்டியில், இந்திய அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.

அந்த அணியில் தமிழகத்தில் இருந்து இடம்பெற்றவர் மகாராஜா மட்டுமே. மற்ற மாநில வீரர்களை அவர்களது மாநில அரசு கௌரவப்படுத்திய நிலையில், தமிழக அரசு பாராமுகத்துடன் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சர்வதேச அளவில் வெள்ளிப்பதக்கம் வெற்ற மகாராஜாவை இதுவரை முதல்வர், விளையாட்டுத் துறை அமைச்சர் என யாரும் சந்தித்து பாராட்டு கூட தெரிவிக்கவில்லை. அமெரிக்காவில் ஆகஸ்ட் 25 ம் தேதி தொடங்கும் இரண்டு மாத பயிற்சிக்காக மகாராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், அதற்கான நிதி இல்லாமல் தவித்து வருகிறார். இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியை சந்தித்து மகாராஜா மனு அளித்தார். உடனே, தனது விருப்ப நிதியில் இருந்து மகாராஜாவுக்கு கிரிக்கெட் கிட் மட்டுமே மாவட்ட ஆட்சியர் வழங்கி பாராட்டினார். இதுகுறித்து, பார்வையற்ற கிரிக்கெட் வீரர் மகாராஜா கூறியதாவது: எனது தந்தை சிவசுப்பிரமணியன் கொரோனா தாக்குதலில் இறந்துவிட்டார்.

தாய் சண்முகத்தாய் உதவியோடுதான் வாழ்ந்து வருகிறேன். அவர் கூலி வேலை செய்து காப்பாற்றி வருகிறார். பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்திய அணியில் இடம்பிடித்தேன். இங்கிலாந்தில் நடந்த உலக பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றோம். அந்த அணியின் கேப்டன் அஜய்குமார் ரெட்டிக்கு ஜனாதிபதி அர்ஜூனா விருது வழங்கி உள்ளார். முன்னாள் கேப்டன் சேகர் நாயருக்கு பத்ம விருது வழங்கப்பட்டுள்ளது.

அணியில் இடம்பிடித்த ஒடிசா மாநில வீரர்களுக்கு 15 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்துள்ளது.ஆனால், தமிழக அரசு இதுவரை எனக்கு ஊக்கத்தொகை ஏதும் வழங்கவில்லை. அரசாணை வழிகாட்டுதல் படி விண்ணப்பத்துள்ள போதிலும் இதுவரை எந்த பதிலையும் அரசு தெரிவிக்காமல் உள்ளது. பயிற்சிக்காக அமெரிக்கா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ள எனக்கு தமிழக அரசு உதவ முன்வர வேண்டும்.

முதல்வர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரின் கவனத்துக்கு எனது கோரிக்கையை கொண்டு சென்றுள்ளேன். கனிமொழி எம்.பி., பார்வைக்கும் தெரிவித்துள்ளேன். நல்ல பதில் வரும் என காத்திருக்கிறேன். இவ்வாறு மகாராஜா தெரிவித்தார். பார்வையை இழந்த போதும் தன்னம்பிக்கையுடன் கிரிக்கெட்டில் சாதித்து வரும் இளைஞருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.

Tags

Next Story