தேர்தல் கெடுபிடியால் சந்தையில் வரத்து குறைவு
ஆட்டுச் சந்தை
தேர்தல் கெடுபிடியால் கலையிழந்து காணப்பட்ட திருப்புவனம் ஆட்டுச் சந்தை.
சிவகங்கை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சந்தை திருப்புவனம் கால்நடை சந்தை. மாவட்டத்திலேயே அதிகளவு கால்நடைகள் இப்பகுதியில் வளர்ப்பதால் விவசாயிகள் சந்தையில் கால்நடைகளை விற்பனை செய்து தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள். சிவராத்திரி, தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட சமயங்களில் சந்தையில் ஆடு, கோழி வாங்க பலரும் வருவார்கள், கேரளா, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் லாரி, வேன் உள்ளிட்டவற்றில் லட்சக்கணக்கான ரூபாய் பணத்துடன் ஆடு, கோழி வாங்க வருவார்கள். திருப்புவனம் பேரூராட்சி சார்பாக ஒரு ஆட்டு குட்டிக்கு 27 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும், குறைந்த பட்சம் ஆயிரம் ஆடுகள் முதல் 5 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும், பேரூராட்சிக்கு ஒரு மாதத்திற்கு 2 லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை வருவாய் கிட்டும், நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தேர்தல் கமிஷன் கெடுபிடி காரணமாக இன்றைய திருப்புவனம் சந்தையில் ஆயிரத்திற்கும் குறைவான ஆடுகள் சுற்றுவட்டார கிராங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்தன. அதிகாலை 5 மணி முதல் சந்தையில் குறைந்த அளவே ஆடுகள் விற்பனையாகின. வரத்து குறைவால் 10கிலோ எடை கொண்ட ஆட்டுகுட்டி கடந்த சந்தையில் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.. சேவல் (3 கிலோ) 2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பொதுவாக ரம்ஜானுக்கு ஐயாயிரத்திற்கும் மேற்ப்டட ஆடு, கோழி விற்பனையாகும், தேர்தல் கமிஷன் கெடுபிடி காரணமாக வியாபாரிகள் பலரும் வரவில்லை. வியாபாரிகள் வராததால் விவசாயிகளும் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. இதனால் சந்தையில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. வரத்து குறைவால் விலை உயர்ந்தது. சக்கிமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி கொண்டு வந்த 32 கிலோ எடை கொண்ட ஆடு 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது
Next Story