குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்தால் தகவல் வழங்க வேண்டும் - மாவட்ட ஆட்சித் தலைவர்
மாவட்ட ஆட்சித் தலைவர்
தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் பருக வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக குடிநீர் ஆதாரங்களில் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் கிருமிகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் குடிநீரேற்று நிலையங்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் குளோரினைக் கலந்து விநியோகிக்கவும் நுகர்வோருக்கு குடிநீர் சென்றடையும் இடத்தில் குடிநீரில் உள்ள குளோரின் அளவினைக் கண்காணிக்கவும் குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. அதன்படி, குளோரின் கலந்த குடிநீர் மட்டுமே பொதுமக்களுக்கு உள்ளாட்சிகளால் விநியோகம் செய்யப்பட்டுவருகின்றது. இருப்பினும், குடிநீரேற்று நிலையங்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளிலிருந்து பொதுமக்களுக்குச் சென்றடையும் குழாய்களில் உள்ள சிறுசிறு துளைகள் மூலமாகவோ அல்லது பொதுமக்கள் குடிநீர் பிடிக்கும் இடங்களிலோ குடிநீரில் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், குடிநீர் ஆலைகளைக் கண்காணிக்கவும் உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குடிநீர் ஆலைகளில் தயார் செய்யப்படும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, பாட்டிலில் அடைக்கப்படும் குடிநீரினை, ஆலையின் உள் பகுப்பாய்வகம் மற்றும் தேசிய தரச்சான்று பெற்ற பகுப்பாய்வகத்தில் பகுப்பாய்வு செய்து, அதன் அறிக்கையினை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சுத்திகரிக்கப்பட்டு 20 லிட்டர் கேன்களில் அடைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படும் குடிநீரானது அதனை பாட்டிலில் அடைக்கும் போதோ அல்லது அவற்றின் விநியோகத்தின் போதோ, அக்குடிநீரில் கிருமித்தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அனைத்து வகைக் குடிநீரையும் நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்த பின்னர் பருக வேண்டும். குடிநீரில் குளோரின் கலக்காமல் விநியோகம் செய்யப்பட்டாலோ அல்லது குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதாக சந்தேகித்தாலோ சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்குத் தகவல் வழங்க வேண்டும் என்றும், சுத்திகரிக்கப்பட்டு, பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீரின் தரத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், உணவு பாதுகாப்புத் துறை, தொலைபேசி எண்:9444042322-க்கு தகவல் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
Next Story