ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை துவக்கம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மண்டல பூஜை
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் குண்டு ஊரணி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக புனித நீர் நிரப்பப்பட்ட நவ கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து, கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து ஐயப்ப சுவாமியின் மூல மந்திரங்கள் கூறி யாக குண்டத்தில் 108 மூலிகைப் பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் பூமாலைகள் சமர்ப்பித்து பூர்ணகுதி அளிக்கப்பட்டன.
பின்னர் அர்ச்சனைகள் செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கல வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து, மூலவர் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து ஐயப்ப சுவாமிக்கு மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்ப சுவாமியை வழிபட்டனர்.
