பொதிகை சுற்றுலாப் படகு பராமரிப்புப் பணி துவக்கம்

பொதிகை சுற்றுலாப் படகு பராமரிப்புப் பணி துவக்கம்
பராமரிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட பொதிகை சுற்றுலா படகு
கன்னியாகுமரியில் பழுதடைந்த நிலையில் இருக்கும் பொதிகை சுற்றுலா படகை சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது.

கன்னியாகுமரி கடலில், உள்ள பாறைகளில் விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலை ஆகியவை அமைந்துள்ளது. இவற்றை சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பாா்வையிட வசதியாக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறை சீசனையொட்டி பழுதடைந்த நிலையில் காணப்படும் பொதிகை படகை சீரமைக்க பூம்புகாா் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.

இதைத் தொடா்ந்து பொதிகை படகு, கன்னியாகுமரியில் உள்ள பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத்துறையில் இருந்து கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்தப் படகு கரையேற்றப்பட்டு நேற்று சீரமைக்கும் பணி தொடங்கியது. சீரமைக்கும் பணி சில தினங்களில் நிறைவடையும் எனவும் இதையடுத்து இப்படகு புதுப்பொலிவுடன் வெள்ளோட்டம் விடப்பட்டு பயணிகள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக்கழக அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story