விசலேசுவரம் கோயிலில் பாண அரசர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

விசலேசுவரம் கோயிலில் பாண அரசர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

கல்வெட்டு 

விளக்கணாம்பூண்டி விசலேசுவரம் கோயிலில் விஜயாதித்த வாணராயர் எனும் பாண அரசர் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்தைச் சேர்ந்த சிற்றூர்களுள் ஒன்று விளக்கணாம்பூண்டி ஆகும். டாக்டர் மா. ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மருத்துவர் சுந்தரேசன் இங்குள்ள விசலேசுவரம் கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது கோயில் விமானத்தின் தாங்குதளத்தில் பொறிக்கப்பட்டிருந்த அரிய கல்வெட்டொன்றைக் கண்டறிந்துள்ளார்.

விசலேசுவரம் கோயில் பல திருப்பணிகளால் ஆங்காங்கே மாற்றம் கண்டு புதிய இணைப்புகளையும் பெற்றுள்ளது. கோயிலின் இறைவிமானம் மூன்று சதுரத்தளங்களையும் எண்கோணச் சிகரத்தையும் பெற்று எழிலார்ந்து விளங்குகிறது. அதன் தாங்குதளம் கற்கட்டுமானமாக அமைய, பிற அனைத்து உறுப்புகளும் செங்கல், சுதை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் வளாகத்திலிருந்து அரசர் விஜயகண்டகோபாலரின் கல்வெட்டு உள்ளிட்ட தூண், பலகைக் கல்வெட்டுகள் சில முன்னரே கண்டறியப்பட்டுள்ளன. டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் உருவாக்கி வரும் காலத்தால் முற்பட்ட கட்டுத்தளிகள் பற்றிய ஆய்வுநூலுக்காக அத்தகு கட்டமைப்பிலுள்ள தமிழ்நாட்டுக் கோயில்களை ஆய்வுசெய்து, அவற்றின் காலத்தை உறுதிசெய்யும் சான்றுகள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

ஆய்வாளர் சுந்தரேசன். விளக்கணாம்பூண்டி விசலேசுவரம் கோயிலில் விரிவான ஆய்வுப்பணி மேற்கொண்ட போது இறைவிமானத்தின் தாங்குதள உறுப்பான குமுதத்தில், விஜயாதித்த வாணராயர் எனும் பாண அரசரின் பெயர் பொதுக்காலம் 9ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் பொறிக்கப்பட்டிருந்ததை அவர் கண்டறிந்தார். இக்கல்வெட்டை ஆராய்ந்த ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் கலைக்கோவன் கூறும்போது, மருத்துவர் சுந்தரேசனால் கண்டறியப்பட்ட இக்கல்வெட்டு, விசலேசுவரம் கோயில் இப்பாணஅரசரின் காலத்தில் கட்டப்பட்டதாகலாம். பொ.கா. 9ம் நூற்றாண்டின் இறுதியிலும் 10ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் விளக்கணாம் பூண்டியையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆட்சி செய்த பாணர் மரபைச் சேர்ந்தவர் விஜயாதித்த வாணராயர். இது, பல்லவ மேலாண்மையின்றி விஜயாதித்தர் தனியாட்சி நடத்தியமை காட்டுகிறது.

இக்கல்வெட்டுச் சான்றுகள் பாணஅரசர் விஜயாதித்த வாணராயரின் சிறப்புமிக்க ஆட்சியையும் அவரால் உருவாக்கப்பட்ட குடியிருப்புகளையும் உணர்த்துகின்றன. விளக்கணாம்பூண்டி விசலேசுவரம் கோயிலில் புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டு, இக்கோயில் விஜயாதித்த வாணராயரால் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதச்செய்கிறது என்றார்.

Tags

Next Story