காஞ்சிபுரத்தில் பசுமை பந்தலை மீண்டும் அமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரத்தில் பசுமை பந்தலை மீண்டும் அமைக்க வலியுறுத்தல்

வாகன ஓட்டிகள் 

வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்திற்காக, அகற்றப்பட்ட பசுமை பந்தலை மீண்டும் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி துவங்குவதற்கு முன்பே, காஞ்சிபுரத்தில் ஏப்., மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்தே, 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவியது.

சுட்டெரிக்கும் வெயிலில் காஞ்சிபுரம் இரட்டை மண்டபம் போக்குவரத்து சிக்னல்களில், இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதையடுத்து, சிக்னலில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், இரட்டை மண்டபம் சிக்னலில் பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டது. இதனால், வெயிலில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பசுமை பந்தல் நிழலில் இளைப்பாறி சென்றனர்.

இந்நிலையில், வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி சுவாமி வீதியுலா சென்று வருவதற்காக, இடையூறாக இருந்த பசுமை பந்தல் அகற்றப்பட்டது. தற்போது, வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றுள்ளது. கத்திரி வெயில் முடிந்தும், காஞ்சிபுரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால்,

இரட்டை மண்டபம் சிக்னலில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் வெயிலில் நிற்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்திற்காக, அகற்றப்பட்ட பசுமை பந்தலை மீண்டும் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story