குறுவை இழப்பீடு நிதி வழங்க வலியுறுத்தல்

குறுவை இழப்பீடு நிதி வழங்க வலியுறுத்தல்

நிதி வழங்க வலியுறுத்தல்

குறுவை இழப்பீடு நிதி வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனையும், இழப்பீடு நிதியையும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்திருப்பது: நீா் கிடைக்க வாய்ப்புள்ள பகுதிகளைத் தவிர, பிற விவசாயிகள் மேட்டூரில் உள்ள நீா் இருப்பை நம்பி குறுவை சாகுபடி தொடங்க முடியாமல் அச்சத்தில் உள்ளனா்.

பருவமழையும் வழக்கத்தை விட கூடுதலாக வருமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், ஆகஸ்ட் மாத வாக்கில் மழை அதிகமாக பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கிறது. எனினும், இந்த மழை குறுவை சாகுபடிக்கு பயன்படுமா அல்லது பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய காலத்தில் தமிழக அரசு ஆலோசனை வழங்க வேண்டும். கா்நாடக அரசு, கடந்தாண்டு மட்டுமே தர வேண்டிய காவிரி நீா் 90 டிஎம்சி எஞ்சியுள்ளது. இதை பெற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, குறுவை பயிரிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து சரியான அறிவிப்பை மாநில அரசு வழங்க வேண்டும். குறுவை பயிா் பாதுகாப்புக்காக, பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். காவிரி நீரின்றி குறுவை சாகுபடி செய்ய முடியாமல், வருமானத்தை இழந்த விவசாயிகளுக்கு குறுவை இழப்பு சிறப்பு நிதி வழங்க வேண்டும்.

கடந்தாண்டில் நீரின்றி காய்ந்த பயிா்களாலும், பருவம் தவறிய மழையாலும் வேளாண் வருமானத்தில் இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் வேளாண் கடனுக்கான வட்டிச்சலுகை காலக்கெடு முற்றுப்பெறுவதால், அக்கடன்களுக்கு வட்டி விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த வட்டியைத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Tags

Next Story